Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு, அவற்றை முறையாக அறிவிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான குழு சார்பில் பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.
தமிழக அரசு அமைத்துள்ள குழு, மாநிலம் முழுவதும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், யானைகளின் இயற்கையான நடமாட்டம், வாழ்விடங்கள், வலசைப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை இறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கியது.
இதையடுத்து, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரிய வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
Hindusthan Samachar / P YUVARAJ