கும்பகோணத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடல் -தனியார் மதுபானக் கடையில் அலைமோதிய கூட்டம்!
தஞ்சாவூர், 05 செப்டம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கடை முன்பு மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூ
டாஸ்மாக்


தஞ்சாவூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கடை முன்பு மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாகக் கூறி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு மதுபானக் கடை பணியாளர்கள் கடைகளை அடைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் தனியார் மதுபானக் கடையை நாடியதால் அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது.

நேற்று இரவும் இதேபோன்று அதிகளவில் கூட்டம் திரண்டதால், போலீசார் தலையிட்டு தனியார் மதுபானக் கடையை மூடச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுபானம் வாங்க ஏராளமானோர் திரண்டதால் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P