Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம்
வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் பணியில் தவெக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் என்.ஆனந்த் ஆகியோர் இன்று நேரில் சென்றனர்.
அங்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, வரும் 9-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக, நேற்று கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் சந்தித்து, வரும் 9-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ