Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் வருகிற
9-ந் தேதி தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, தவெக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு சென்ற தவெக நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினர்.
தவெக ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காத நிலையில், வருகிற 9-ந்தேதி நடைபெறும் 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவெக அரசின் நல்லாட்சி மற்றும் நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம். அதேநேரத்தில், அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது.
மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. அமைச்சர்கள் மற்றும் அரசை அதிகாரிகள் வழிநடத்தும் நிலை இருப்பதாக அவர் விமர்சித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்றும் வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம் என்றும், கூட்டணியில் நாங்கள் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam