திருவாரூரில் 88 டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்திய 417 ஊழியர்களுக்கு மெமோ - இரண்டாம் நாள் போராட்டம் வாபஸ்
திருவாரூர், 05 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தால் கடைகளில் பணிச்சுமை அதிகரிப்பதாகவ
திருவாரூரில் 88 டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டம் நடத்திய 417 ஊழியர்களுக்கு மெமோ: இரண்டாம் நாள் போராட்டம் வாபஸ்


திருவாரூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தத் திட்டத்தால் கடைகளில் பணிச்சுமை அதிகரிப்பதாகவும், பாட்டில்களை எண்ணி சேமித்து வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 88 டாஸ்மாக் கடைகளையும் மூடி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் கடை அடைப்பு காரணமாக மாவட்டத்தில் மது விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, அனுமதியின்றி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, போராட்டத்தில் பங்கேற்ற 417 ஊழியர்களுக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மெமோ வழங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர ஊழியர் சங்கம் முடிவு செய்திருந்த நிலையில், நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மேலிடத்தில் இருந்து வந்த அறிவுறுத்தலின் பேரிலும், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன.

Hindusthan Samachar / vidya.b