சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறப்பு - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தஞ்சாவூர், 06 செப்டம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்லணையில் இருந்து சம்பா சாகுபடியை முன்னிட்டு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாக
3,000 cusecs of water released from Kallanai for Samba cultivation


தஞ்சாவூர், 06 செப்டம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்லணையில் இருந்து சம்பா சாகுபடியை முன்னிட்டு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

தமிழக விவசாயத்தின் செழிப்பை குறிக்கும் வகையில், ஆற்றில் நெல்மணிகளை தூவியும், மலர்களை தூவியும் மரபு முறைப்படி அமைச்சர்கள் நீரை திறந்து வைத்தது விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திறக்கப்பட்ட மொத்தம் 3000 கனஅடி நீரில், காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லணை கால்வாயில் 500 கனஅடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 500 கனஅடி வீதம் தண்ணீர் பிரித்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நீர் திறப்பின் மூலம் காவிரி படுகையில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட உள்ள சம்பா நெல் சாகுபடி பெரும் பயன்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b