ஒகேனக்கல் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி - தேடும் பணி தீவிரம்
தருமபுரி, 06 செப்டம்பர் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த நில அளவையர் செந்தில்குமாரின் மகள் அபிநிஷா (13). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், உறவினர்க
ஒகேனக்கல் ஆற்று  நீரில் அடித்துச் செல்லப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி - 5 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்


தருமபுரி, 06 செப்டம்பர் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த நில அளவையர் செந்தில்குமாரின் மகள் அபிநிஷா (13). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், உறவினர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த அபிநிஷா, ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் வலது புறத்தில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், நீரின் இழுப்பில் சிக்கி அவர் அடித்துச் செல்லப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உடனிருந்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், மாணவியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b