Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாவட்டச் செயலாளர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள், அமைப்பு ரீதியான செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, விரைவில்
அ.தி.மு.க வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும், அதற்கான தேதி மற்றும் இடம் குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பங்கேற்காதது கட்சியினரிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b