ஆந்திரா பேப்பர் ஆலைக்கு ரூ.21.01 கோடி சுற்றுச்சூழல் அபராதம்- துணை முதல்வர் பவன் கல்யாண்
ராஜமுந்திரி , 06 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் செயல்பட்டு வரும் ஆந்திரா பேப்பர் லிமிடெட் ஆலைக்கு ரூ.21.01 கோடி சுற்றுச்சூழல் அபராதம் விதித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை தொடர்ந்து மீற
A


ராஜமுந்திரி , 06 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் செயல்பட்டு வரும் ஆந்திரா பேப்பர் லிமிடெட் ஆலைக்கு ரூ.21.01 கோடி சுற்றுச்சூழல் அபராதம் விதித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி, கோதாவரி ஆற்றை மாசுபடுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆந்திரா பேப்பர் ஆலையின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ராஜமுந்திரி நகரில் ஏற்படும் மாசுபாட்டில் கணிசமான அளவு இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

ராஜமுந்திரி நகரில் தினமும் சுமார் 70 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகும் நிலையில், அதில் சுமார் 35 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆந்திரா பேப்பர் ஆலையில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் தெரிவித்தார்.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், BOD, பாஸ்பேட், சல்பைடு உள்ளிட்ட மாசுபடுத்தும் பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கழிவுநீர் கோதாவரி ஆற்றில் கலப்பதால் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், துர்நாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஆந்திரா பேப்பர் ஆலை நிர்வாகத்திடம் 2016-ம் ஆண்டு முதல் சுமார் ரூ.21.34 கோடி வரி பாக்கி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வரி செலுத்துவதை தவிர்க்க ஆலை நிர்வாகம் தொடர்ந்து நீதிமன்றங்களை நாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலை நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிர்வாகத்தின் தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆந்திரா பேப்பர் ஆலைக்கு ரூ.21.01 கோடி சுற்றுச்சூழல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், அதன் செயல்பாடுகளை நிறுத்துவது, சொத்துகளை பறிமுதல் செய்வது, உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

‘தூய்மையான கோதாவரி - புனித புஷ்கரங்கள்’ என்ற இலக்கை அடையும் வகையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA