Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் மட்டும் மூன்று இடங்களில் ஏடிஎம்கள் உடைக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம்மை உடைத்து ரூ.11.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், குன்றத்தூர்–திருப்பெரும்புதூர் சாலையில் சோமங்கலத்தில் ஏடிஎம்மை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கூடப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் முழுமையாக தூக்கிச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று சம்பவங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கனவே இரு ஏடிஎம் கொள்ளைகள் நடைபெற்ற பிறகும் ஏடிஎம்கள் மீதான கண்காணிப்பை காவல்துறை ஏன் வலுப்படுத்தவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, சென்னை பெசன்ட் நகரில் ஆளும் தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என விமர்சித்துள்ளார்.
“வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதும், கொலைக் குற்றங்கள் அதிகரிப்பதும் ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும். குற்றங்கள் இனியும் நடைபெறாத வகையில் காவல்துறை கண்காணிப்பையும், உளவுத்துறையின் செயல்பாடுகளையும் தமிழக அரசு வலுப்படுத்த வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P