சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குளறுபடிகளுக்கு இடம் தரக்கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.) மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 கணக்கெடுப்பில் ஓபிசி மக்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள நடைமுறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்
ஸ்டாலின்


தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 கணக்கெடுப்பில் ஓபிசி மக்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள நடைமுறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஓபிசி பிரிவினரின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாதிப் பட்டியல் அல்லது தேர்வு மெனு இல்லாத

‘open-ended format’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்த உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைத் தொகுத்து, அதிலிருந்து மக்கள் தங்களது சாதியைத் தேர்வு செய்யும் வகையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் தாங்கள் கூறும் சாதிப் பெயரை நேரடியாகப் பதிவு செய்யும் முறையைப் பின்பற்றினால் குழப்பங்கள் ஏற்படும் என்றும், இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாக குளறுபடியான கணக்கு வரும் ஆபத்து இருப்பதாக சமூகநீதி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதை ஒன்றிய அரசு புறக்கணிக்கக் கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம், பட்டியலின மக்களின் எண்ணிக்கையைப் போலவே ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் அவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலையை அறிந்து, அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்களை முறையாக வகுப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நடைமுறை தொடர்ந்தால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக செலவிடப்படும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணாகும் என்றும், இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக மாறிவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குளறுபடிகளுக்கு இடமளிக்காமல் சாதிவாரி கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறும் வகையில் ஒன்றிய அரசு உடனடியாக திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P