Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 8) டெல்லியில் நடைபெற உள்ளது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட காவிரி படுகை மாநிலங்களின் நீர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும், தமிழகத்திற்கு இதுவரை திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரின் அளவு, கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவாகியுள்ள மழையளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
கர்நாடக அணைகளில் தற்போதுள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து நிலவரம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இதனிடையே, தமிழகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடகாவில் இருந்து கூடுதல் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், வரும் 8-ம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam