பரந்தூர் விமான நிலைய திட்டம் -மாற்று இடங்களை தேர்வு செய்த தமிழக அரசுக்கு பா.ஜ.க கண்டனம்
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசு, விமான நிலையம் அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஆகிய இரு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை
Narayanan Thirupathi


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசு, விமான நிலையம் அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஆகிய இரு இடங்களை மத்திய அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கும்மிடிப்பூண்டி மற்றும் செய்யூர் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான முன்சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்றவை அல்ல என பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும், விமான நிலையத்திற்காக முன்தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களில் இவை இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கும்மிடிப்பூண்டியில் மிகப்பெரிய அளவில் நிலம் கிடைக்குமா, அந்த பகுதி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருப்பது, செய்யூர் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு அருகில் இருப்பது உள்ளிட்ட அம்சங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டதன் மூலம் தமிழகத்தின் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்ற வாய்ப்பை அரசு தவறவிட்டுள்ளதாகவும், தற்போது அவசர அவசரமாக மாற்று இடங்களை தேர்வு செய்து தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

“வரட்டு பிடிவாதத்தை கைவிட்டு, பரந்தூரில் பாதிக்கப்படும் மக்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, உரிய இழப்பீடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதே சரியான முடிவு” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தட்டிச்செல்லும் நிலை ஏற்படும் என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P