Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 செப்டம்பர் (ஹி.ச.)
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் காமர்ஸ் கல்லூரியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
நாட்டின் இளைஞர்கள், கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து பிரதமருடன் உரையாடுவதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இளைஞர்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்கு பதிலாக பிரதமரின் உரை மீண்டும் ஒரு அரசியல் பிரசாரமாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக எதிர்க்கட்சியினரை குறிவைத்து ஒவ்வொரு ஆண்டும் புதிய அடைமொழிகளை பயன்படுத்துவது பிரதமர் மோடியின் செயல்முறையாக மாறிவிட்டதாக விமர்சித்த கார்கே, “Angry Uncle, Brainy Naxal, Urban Naxal, Khan Market Gang, Agitation-jiwi, Parasite” என பல்வேறு அடைமொழிகளை குறிப்பிட்டுள்ளார். அடைமொழிகள் மாறினாலும், மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நீங்கள் மக்களிடமிருந்து விலகி இருக்கும்போதுதான் Outreach தேவைப்படுகிறது” என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
பிரதமர் தனது ஆட்சியின் “ரிப்போர்ட் கார்டை” முன்வைத்த நிலையில், நாட்டின் இளைஞர்களும் தங்களது ரிப்போர்ட் கார்டுடன் நிற்பதாக கார்கே கூறியுள்ளார். அதில் வேலையின்மை, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசு பணியிடங்கள், வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்கள், அதிகரித்து வரும் கல்விக் கட்டணம், குறைந்து வரும் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மீது அதிகரித்து வரும் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பிரச்னைகளைத் தவிர்த்துவிட்டு பேசுவதால் தீர்வு கிடைக்காது என்றும், “மாணவர்களின் குரலைக் கேளுங்கள்,பிரச்னைகளைச் சுற்றி வளைத்து பேசுவதால் தீர்வுகள் கிடைக்காதுஎன்றும் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P