மின் கட்டண உயர்வு புகார் எதிரொலி - வீடுகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) மின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதை அடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. குறிப்பாக 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் ப
Following complaints about electricity tariff hikes


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

மின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதை அடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

குறிப்பாக 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், கடந்த மாதங்களை விட மின் கட்டணம் சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனை தீவிரமாக கருத்தில் கொண்ட மின்வாரியம், இது குறித்து விரிவான ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வந்த மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத கணக்கீட்டில் 20 சதவீதத்திற்கு மேல் கட்டணம் அதிகரித்திருந்தால், அந்த வீடுகள் தனியாக கண்டறியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான வகையில் கூடுதல் கட்டணம் வந்துள்ளதாக கருதப்படும் வீடுகளுக்கு, தற்காலிகமாக மின் கட்டண வசூல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்த வேண்டாம் என்று நிறுத்தி வைக்கப்படும் வீடுகளுக்கு மின்வாரிய அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.

இந்த ஆய்வு முறை கட்டண உயர்வின் அளவை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அதிகரித்திருந்தால், சம்பந்தப்பட்ட பகுதியின் மின் ஆய்வாளர் அல்லது வருவாய் மேற்பார்வையாளர் நேரில் சென்று மீட்டர் மற்றும் பயன்பாட்டை சரிபார்ப்பார். அதுவே பத்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் உயர்ந்திருந்தால், உதவி செயற்பொறியாளர் தலைமையிலான குழு நேரடியாக ஆய்வு செய்யும்.

நேரில் நடத்தப்படும் சரிபார்ப்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அந்த கூடுதல் தொகை அடுத்த மாத மின் கட்டணத்தில் ஈடு செய்து சரி செய்யப்படும் என்றும் மின்வாரியம் உறுதி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை மின் நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b