குழிதோண்டும் பணியில் கிடைத்த 14 தங்க நாணயங்கள்
பெலகாவி , 06 செப்டம்பர் (ஹி.ச.) பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில் குழிதோண்டும் பணியின்போது பழங்கால பானைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்கள் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம்
A


பெலகாவி , 06 செப்டம்பர் (ஹி.ச.)

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில் குழிதோண்டும் பணியின்போது பழங்கால பானைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நாணயங்கள் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஞ்சலா கிராமத்தில் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பி.சி.எம். விடுதி அருகே வேலி அமைப்பதற்காக தொழிலாளர்கள் குழி தோண்டினர்.

அப்போது மண்ணுக்குள் பழங்கால பானை ஒன்று தென்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்கள் அந்த பானையை வெளியே எடுத்து பார்த்தபோது, அதற்குள் தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தங்களது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பின்னர் தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் இணைந்து 14 தங்க நாணயங்களையும் இஞ்சலா கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரி, சவதத்தி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார், தங்க நாணயங்களை கைப்பற்றி தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறையினர் நாணயங்களை ஆய்வு செய்தனர்.

கங்கர் காலத்தை சேர்ந்தவையா?

ஆய்வில், இந்த தங்க நாணயங்கள் சுமார் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவை கங்கர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்தவையாக இருக்குமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நாணயங்களின் மேற்புறத்தில் யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

கங்கர் ஆட்சி காலத்தில் யானை அரசு சின்னமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதால், இந்த நாணயங்கள் கங்கர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

எனினும், முழுமையான ஆய்வுக்கு பின்னரே அவற்றின் காலம் மற்றும் வரலாற்று பின்னணி உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.82 லட்சம் மதிப்பு

கண்டெடுக்கப்பட்ட 14 தங்க நாணயங்களின் மொத்த எடை 54.8 கிராம் ஆகும். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.82 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழிதோண்டும் பணியின்போது பழங்கால பானைக்குள் 14 தங்க நாணயங்கள் கிடைத்த சம்பவம் இஞ்சலா கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA