விண்வெளி சாதனைகளின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகளின் சொல்லொணா வலியை மறந்துவிட முடியுமா? – மாணிக்கம் தாகூர் கேள்வி
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச) இந்தியாவின் விண்வெளி சாதனைகளுக்குப் பின்னால் இரவு பகல் பாராமல் உழைத்த விஞ்ஞானிகளின் தியாகமும், கடின உழைப்பும், தோல்விகளைக் கடந்து அவர்கள் சிந்திய கண்ணீரும் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்
Manickam


Nn


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)

இந்தியாவின் விண்வெளி சாதனைகளுக்குப் பின்னால் இரவு பகல் பாராமல் உழைத்த விஞ்ஞானிகளின் தியாகமும், கடின உழைப்பும், தோல்விகளைக் கடந்து அவர்கள் சிந்திய கண்ணீரும் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

வானத்தை முட்டும் ராக்கெட்டுகள், நிலவையும் சூரியனையும் எட்டும் விண்வெளித் திட்டங்கள், விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பிரம்மாண்ட முயற்சிகள் என இந்தியாவின் விண்வெளித் துறை தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆனால், தேசமே கொண்டாடும் இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளின் பணிச்சுமை, மன அழுத்தம், குடும்பத்தை மறந்து மேற்கொள்ளும் உழைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உலகமே வியக்கும் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் அதே விஞ்ஞானிகள், தங்களது வேலைப் பாதுகாப்பு, முறையான ஊதியம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களையும் கடிதங்களையும் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

1969 ஆகஸ்ட் 15 அன்று தொலைநோக்குப் பார்வையுடன் பண்டித ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி மற்றும் விக்ரம் சாராபாய் போன்ற தலைவர்களின் பங்களிப்புடன், பொதுத்துறையின் வலிமையான அடித்தளத்தில் இஸ்ரோ கட்டமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தன்னிறைவுக்காக கட்டியெழுப்பப்பட்ட இந்தியாவின் விண்வெளித் துறையையும், விஞ்ஞானிகளின் மாபெரும் உழைப்பையும், இன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், விஞ்ஞானிகள் சாதனை படைக்கும் நேரங்களில் மட்டும் கேமரா வெளிச்சத்தில் அவர்களுடன் நின்று பெருமை கொள்ளும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்களது பணியுரிமை மற்றும் வேலைப் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும்போது ஏன் கவனம் செலுத்துவதில்லை என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் மோடி அரசுக்கு, அந்த சாதனையை நிகழ்த்தும் உழைக்கும் கைகளின் வலி ஏன் புரிவதில்லை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக்காயாக்கும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், “இஸ்ரோ என்பது இந்தியாவின் அடையாளம்; அதைத் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்” என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ