Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, சந்தோஷ், ஜோஸ்வா உள்ளிட்ட ஏழு கல்லூரி மாணவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
கடந்த வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பெற்றோரிடம் பேசுவதற்கே நம்மால் தாங்க முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சமர்ப்பித்த விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1,83,434 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
2025-ல் தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளால் 18, 505 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 18,449 உயிர்கள் சாலை விபத்து காரணமாக பறிபோன நிலையில், அதைவிட 2025 ஆம் ஆண்டில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தமிழ்நாட்டில் 43, 529 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 11,019 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதே காலகட்டத்தில் 2,340 சாலை விபத்துகளில் 308 பேர் இறந்துள்ளனர். இந்த தகவல்கள் மாநில குற்ற ஆவணக் காப்பக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் நமக்கு அதிகம் தேவை என்பதையே மேற்கண்ட தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகள் மாநில நெடுஞ்சாலைகளில் ஹாட் ஸ்பாட் எனவும், தேசிய நெடுஞ்சாலைகளில் பிளாக் ஸ்பாட் எனவும் அடையாளம் காணப்பட்டு விபத்து நடக்காத வண்ணம் அவற்றை சீரமைக்கும் பணிகள் ஒவ்வொரு அரசிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையெல்லாம் கடந்து சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம்! விபத்துகளையும் உயிரிழப்பையும் தடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN