பழனி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திண்டுக்கல், 06 செப்டம்பர் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்
Palani Murugan Temple


திண்டுக்கல், 06 செப்டம்பர் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பழனி கோவில் அடிவாரம், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

தற்போது ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதை வழியாகவே பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின் இழுவை ரயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.

பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

குறிப்பாக, ஒருவழிப் பாதை முறை அமல்படுத்தப்பட்டு, குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமி தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலைக்கோவிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் கோவில் பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

வார விடுமுறையை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் கோவில் அடிவாரம் மற்றும் மலைக்கோவில் பகுதிகள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN