Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 06 செப்டம்பர் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தனியார் மருத்துவமனையில் கால் முறிவுக்கு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி உயிரிழந்ததை கண்டித்து, சிறுமியின் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பரமத்தி வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் வெண்ணிலா மற்றும் காவல் ஆய்வாளர்கள் உமாசங்கர், சங்கர பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, அதன் அறிக்கை கிடைத்த பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சிறுமியின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டிய மருத்துவர் நவலடியனை பரமத்தி வேலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN