காவல்துறையினர் சட்டத்தை மீறுவது குறித்து அமைச்சர் வன்னி அரசு கருத்து
சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.) இன்று (செப். 6) காவலர் நாள் என அனுசரிக்கப்படுகிறது. காவலர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு மனிதனை 10
Vanniarasu


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

இன்று (செப். 6) காவலர் நாள் என அனுசரிக்கப்படுகிறது. காவலர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

ஒரு மனிதனை 10 காவலர்கள் சேர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடியுள்ள இடத்தில் கட்டி இழுத்துச் சென்று தாக்கும் வீடியோ ஒன்றை காலையில் பார்க்க நேர்ந்தது. பட்டப்பகலில் இப்படி மிருகத்தனமாக காவலர்கள் நடந்துக் கொள்கிறார்களே என்று அந்த வீடியோ குறித்து விசாரித்ததில்..

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள நிலம்பாக் எனும் இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், நிலம்பாக் காவல்நிலைய ஆய்வாளர் உணாட்காட் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்கப்படும் நபர் பெயர் காட்கி ரபீக் லக்கானி. அந்த பேருந்து நிலையத்தின் வெளியே சாலையோரம் வசிப்பவர். இரு தினங்களுக்கு முன்பு தன்னுடன் சாலையோரம் வசித்து வந்த காஜல் பாரையா எனும் பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் தான் கைது செய்யப்பட்ட ரபீக் மீது காவல்துறை இந்த வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது.

இந்த காணொலி குறித்து காவல்நிலைய ஆய்வாளர் அளித்த பேட்டியில்,

'சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தான் ரபீக். இது போன்று பொதுமக்கள் பார்வையில் அவனை போன்றோர் மீது வன்முறை செலுத்தினால் தான் மற்றவர்களுக்கும் பயம் இருக்கும்'

என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சட்டத்தின் ஆட்சி மீது பயம் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர்பீ ஆகியோர் அன்றைய முதல்வர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குஜராத் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சிபிஐ முக்கியமாக குற்றஞ்சாட்டியது. இதற்காக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் குஜராத்துக்குள் நுழைய அமித்ஷா அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் இந்த வழக்கிலிருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டது தனிக் கதை. குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்று மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

எந்த ஊர் காவல்துறை என்றாலும் சட்டத்தை மதிக்காமல், மனித உரிமை மீறலில் ஈடுபடுவது எல்லா இடத்திலும் வாடிக்கையான நிகழ்வாக மாற்றப்பட்டு இருந்தாலும், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற 'இந்துத்துவ பரிசோதனை கூடங்களில்' சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதை பார்க்கிறோம்.

இந்த மாநிலங்களில் காவல்துறையினர் சட்டத்தை மீறுவது எப்போதோ நடக்கும் ஒரு பிறழ் நிகழ்வாக அல்லாமல், அரச வன்முறை என்பது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இஸ்லாமியராக இருந்தால் அவர்களை பொது இடங்களில் கைகளை கட்டி இழுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

உத்திரபிரதேசத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இசுலாமியர்கள் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை பாஜக ஆதித்யநாத் அரசு செயல்படுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றமே தலையிட்டு இதனை தடை செய்தாலும், தொடர்ந்து 'புல்டோசர் நீதி' என்ற பெயரில் இசுலாமிய வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது.

காவல்துறையினருக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையும் அச்சமும் வருவதற்கு, முதலில் சனநாயக விழுமியங்களை உணர்ந்து கடைபிடிக்கும் ஒரு சமூகமாக நாம் மாற வேண்டியுள்ளது. சாதிய மனநிலை உள்ள இடத்தில் சனநாயக விழுமியங்கள் சாத்தியம் இல்லை என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.

சமூகத்தை சனநாயகப்படுத்தும் தொடர் செயல்பாட்டை தீவிரப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN