பொன்னமராவதி அருகே வீட்டை உடைத்து நகை திருட முயன்றவர் பிடிபட்டார்
புதுக்கோட்டை, 06 செப்டம்பர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மாபட்டி பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருட முயன்ற
நகை கொள்ளை


புதுக்கோட்டை, 06 செப்டம்பர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மாபட்டி பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருட முயன்ற திருடனை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அம்மாபட்டியை சேர்ந்த சிவகுமார், பொள்ளாச்சியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அவரது வீடு பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அந்த வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது இரண்டு பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து நகைகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.

அப்போது ஒருவர் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். மற்றொருவரை பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை சேர்ந்த கரண் (22) என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் பிடித்த கரணை பொன்னமராவதி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கரண் மீது திருவாரூர் பகுதியில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதாகவும், தப்பிச் சென்ற நாகப்பட்டினம் வேலூர் பகுதியை சேர்ந்த தமிழ் (34) என்பவர் அந்த இடத்தை முன்கூட்டியே நோட்டமிட்டு தகவல் தெரிவித்ததாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இருவரும் பகல் நேரத்தில் அருகில் உள்ள நகரப்பட்டி பகுதியில் தங்கியிருந்து, இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தப்பிச் சென்ற தமிழை பொன்னமராவதி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்மாபட்டி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam