Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 06 செப்டம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சியில் 1,000 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதால், மெட்ரோ ரயில் பணிமனைக்கு தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம் நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பூவிருந்தவல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் இருந்து தினமும் சுமார் 39 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி சார்பில் மாதந்தோறும் சுமார் ரூ.60 லட்சம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4 மாதங்களாக குப்பைகள் முறையாக அகற்றப்படாமல், பூவிருந்தவல்லி ஏரிக்கரையோரம் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து செயற்கை மலை போன்று காட்சியளிக்கிறது. குப்பைகளை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து அகற்றுவதற்காக 5 உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவை முறையாக செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படாமல், சேகரிக்கப்படும் குப்பைகள் நேரடியாக ஏரிக்கரையில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதிக்கு அருகே மெட்ரோ ரயில் வழித்தடமும், பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பணிமனையும் அமைந்துள்ளன. குப்பைகள் தீப்பற்றினால் மெட்ரோ ரயில் பணிமனைக்கும் ரயில்களுக்கும் தீ பரவும் அபாயம் உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் நகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏரிக்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசுபடுவதுடன், பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரியில் குப்பை கொட்டக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை மீறி குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற மாதந்தோறும் ரூ.60 லட்சம் செலவிடப்படும் நிலையில், 1,000 டன்னுக்கும் மேல் குப்பைகள் தேங்கியிருப்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குப்பை அகற்றும் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மெட்ரோ ரயில் பாதுகாப்பு, ஏரி மாசுபாடு மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam