Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 06 செப்டம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் அருகே காவலர் இல்லாத ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் காவலர் பணியில் இல்லாத ஏடிஎம் மையங்களை மூட வேண்டும் என வங்கிகளுக்கு ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஹிதாச்சி ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. நேற்று அதிகாலை 2.54 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்னி வேனில் அங்கு வந்துள்ளது.
கௌபார் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்தெடுத்த கும்பல், அதனை ஆம்னி வேனில் ஏற்றிச் சென்றுள்ளது. பின்னர் அரண்வாயல் அருகே கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் வேனை நிறுத்தி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
பணத்தை எடுத்துக்கொண்ட பின்னர் ஏடிஎம் இயந்திரம் மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய ஆம்னி வேனை அங்கேயே விட்டுவிட்டு, 3 இருசக்கர வாகனங்களில் 6 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். அவை ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கொள்ளையர்களை பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவலர் இல்லாத ஏடிஎம் மையங்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும், காவலர் நியமிக்கப்படாத ஏடிஎம்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் வங்கிகளுக்கு துணை ஆணையர் வினோத் சாந்தாராம் உத்தரவிட்டுள்ளார்.
ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam