Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய நீராதாரமாகவும், வெள்ளத்தடுப்பு பகுதியாகவும் விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி இன்று பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதன் இயற்கைத் தன்மையை பாதிக்கும் எந்தவொரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும் பசுமைத் தாயகம் மற்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பள்ளிக்கரணை பகுதியை முறையாக சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சுவர் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை; ஆனால் நடைபாதை அமைப்பது தேவையற்றது என்று கூறிய சௌமியா அன்புமணி,
மழைக்காலங்களில் சதுப்பு நிலத்திற்குள் தண்ணீர் செல்வதற்கான இயற்கையான நீர்வழித்தடங்கள் எந்த வகையிலும் தடுக்கப்படக் கூடாது என்றார்.
ரூ.21 கோடி செலவில் நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பதற்குப் பதிலாக, அந்த நிதியைப் பயன்படுத்தி சதுப்பு நிலத்தைத் தூர்வாரி சுத்தப்படுத்தவும், அதன் நீர்த்தேக்கத் திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
3 கிலோமீட்டர் தூரத்திற்கு சதுப்பு நிலத்திற்குள் நடைபாதை அமைப்பது தேவையற்ற திட்டம்.
ராம்சார் நிலப்பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது. வேலி அமைக்க வேண்டுமென்றால் அமைத்துக்கொள்ளலாம், ஆனால் நடைபாதை அமைக்கக்கூடாது. இது சதுப்பு நிலத்தின் இயற்கைத் தன்மைக்கு மிகவும் விரோதமானது என சௌமியா அன்புமணி கூறினார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், இதுபோன்ற சூழலில் இயற்கையான நீர்வழிகளைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று, நடைபாதை அமைக்கும் பணிகளை மறுபரிசீலனை செய்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் போவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ