Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக நான்கு ஆண்டுகளாக பரிசீலிக்கப்பட்டு வந்த பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ள நிலையில், மாற்று இடத்தை தேர்வு செய்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் திட்டமிடப்பட்டிருந்த பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சென்னையின் நீண்டகால பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்றாலும், அது மக்களை பாதிக்காத இடத்தில் அமைய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கு மாற்று இடத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்காக இரண்டு முக்கிய இடங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதிக்கும், மாமண்டூருக்கும் இடைப்பட்ட ஒரு இடமும், திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மாநெல்லூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மற்றொரு இடமும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு இடங்களும் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதில் ஒரு இடம் காஞ்சிபுரத்திற்கு அருகிலும், மற்றொரு இடம் அரக்கோணத்திற்கு அருகிலும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இடங்கள் ஏற்கனவே கடந்த காலங்களில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரிசீலிக்கப்பட்ட 11 இடங்களின் பட்டியலில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று இடங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான தொழில்நுட்ப ஆய்வு செய்யுமாறு விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் இருந்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் சென்னை வந்து இரு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
இரு இடங்களிலும் நிலத்தின் தன்மை, விமான போக்குவரத்திற்கு ஏற்ற வானிலை சூழல், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, நிலம் கையகப்படுத்தும் செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். விமான நிலைய ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இரு இடங்களில் எது விமான நிலையம் அமைக்க மிகவும் ஏற்றது என்பது குறித்து தமிழக அரசு இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b