Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 06 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற பிம்பத்தை உருவாக்கி, தந்திரமான முறையில் செயல்பட்டு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உசிலம்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இங்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படை புரிதல் கூட இருக்கிறதா என்று தெரியவில்லை என்று சாடினார். தமிழக மக்கள் என்ன அடிப்படையில் வாக்களித்தார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது என்றும், வெறும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் என்பதற்காக அவர்களை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்களை நடுரோட்டில் நிறுத்தியது போன்ற செயலை தவெக அரசு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது அரசியல் அறமற்ற செயல் என்றும், குதிரை பேரத்தின் வெளிப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவெக நிர்வாகி நிர்மல் குமாரின் சமீபத்திய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தினகரன், அவரது பேச்சு அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களை உதாசீனம் செய்வது போல் உள்ளது என்றும், திராவிட இயக்கங்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
சினிமா பாணியிலான அணுகுமுறையால் நிர்வாகத்தை நடத்த முடியாது என்றும், இது ஆட்சி அல்ல, இது சினிமா அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b