Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 06 செப்டம்பர் (ஹி.ச.)
தன்னை பற்றி சமூக வலைதளங்களில் தகாத கருத்துகளை தெரிவித்த காவலரை வெறும் பணியிடை நீக்கம் செய்ததோடு நடவடிக்கையை முடித்துக்கொண்டதாக, தெலங்கானா ரக்ஷண சேனா தலைவி கல்குந்த்ல கவிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களை அவதூறாக பேசினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்டங்கள் இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது காவல்துறை ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அந்த காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவேன் என்றும் கவிதா எச்சரிக்கை விடுத்தார்.
ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா கூறியதாவது:-
டி.ஜி.பி.க்கு 2 மருமகள்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி இதுபோன்று யாராவது கருத்து தெரிவித்தால் அவர் அமைதியாக இருப்பாரா? என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன?
தற்போதைய டி.ஜி.பி. பொறுப்பேற்ற பிறகுதான் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாகவும் வெட்கக்கேடான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு கவிதா கூறினார்.
போராட்டக்காரர்கள் புறக்கணிப்பு
தேர்தலுக்கு முன்பு தெலங்கானா போராட்டக்காரர்களின் காலில் விழுந்து ஆதரவு கேட்ட முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் அவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாகவும் கவிதா குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் அரசு தெலங்கானா போராட்டக்காரர்களுக்கு இருந்த நம்பிக்கையை வஞ்சித்துவிட்டது. இனி ஆமரண உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே போராட்டக்காரர்களின் நலனுக்காக குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய தெளிவான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
42 சதவீத இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) சமூகத்தினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி தவறான கணக்குகளை வெளியிட்ட காங்கிரஸ் அரசு, தற்போது பி.சி. சமூகத்தினருக்காக போராட்டம் நடத்துவது நகைப்புக்குரியது என்றும் கவிதா விமர்சித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA