Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 06 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி திமுக மத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திமுக மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தலைமையால் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட வேலுச்சாமி மற்றும் வேடசந்தூர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ்,
தனக்கு ஒரு பிரச்சினை என்றால் கே.என்.நேருவும், அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் தானும் இணைந்து நிற்போம் என்று தெரிவித்தார்.
கழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.
திமுக என்ற ஆலமரத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்த அவர், கே.என்.நேருவின் தளபதியாக செயல்பட்டு, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றியை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக கூறினார்.
மேலும், திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கட்சியில் புதிய நிர்வாகிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வெற்றிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டார்வின் கோட்பாட்டை சுட்டிக்காட்டிய அன்பில் மகேஷ், ஒரு உயிரினம் வலிமையாக இருப்பதால் மட்டும் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை என்றும், சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே அதன் நீடித்த வாழ்வுக்கு காரணம் என்றும் கூறினார்.
அதேபோல் திமுகவும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதால்தான் இன்றும் வலிமையான இயக்கமாக நிலைத்து நிற்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய கே.என்.நேரு,
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திருச்சி திமுக தொடர்ந்து வெற்றிகளை பெற்றதாக தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் இழந்த ஏழு தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக கூறினார்.
இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகரத்திற்கு இனி செயலாளர் பதவி இருக்காது, பகுதி செயலாளர்கள் மூலம் நிர்வாகம் செயல்படும் வகையில் தலைமை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம்.
அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும்,நீங்கள் தான் திமுக என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்காக தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam