Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 செப்டம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அய்யம்பெருமாள் முதலியார் தெருவைச் சேர்ந்த சங்கர் (60), அவரது சகோதரர் மாரிக்கண்ணன் (54), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (50) ஆகியோர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.
சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களின்போது மட்டும் எட்டயபுரத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு வந்து செல்வது வழக்கம். மற்ற நேரங்களில் 3 வீடுகளும் பூட்டியே கிடக்கும்.
இந்நிலையில், இன்று காலை சங்கர் மற்றும் சுந்தர் ஆகியோரது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சங்கரின் சகோதரர் மாரிக்கண்ணன் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுந்தர் வீட்டில் மட்டும் வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 பணம் திருடுபோனதாக கூறப்படுகிறது.
மற்ற இரு வீடுகளிலும் பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வீடுகளிலும் கைவரிசை காட்டிய மர்மநபர், அருகில் வசிக்கும் அனந்தம்மாள் (90) என்ற மூதாட்டியின் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் அருகில் படுத்திருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் கண்விழித்த மூதாட்டி, அருகில் மர்மநபர் ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவர் யார் என கேட்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டியின் வாயில் துணியை திணித்து, அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மர்மநபர் தப்பிச் சென்ற பிறகு மூதாட்டி கூச்சலிட்டதையடுத்தே 3 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடைபெற்ற வீடுகளில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P