Enter your Email Address to subscribe to our newsletters

துபாய் , 06 செப்டம்பர் (ஹி.ச.)
பெண்கள் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 12 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களம் கண்ட பிரதீகா ராவல் 4 ரன்களில் வெளியேறினார். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 18 ரன்களும், தீப்தி சர்மா 14 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 57 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3,000 ரன்களை கடந்தார்
இந்த போட்டியில் 7 ரன்கள் எடுத்தபோது இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா, பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்டினார். 114 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டியதன் மூலம், பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
22 வயதான ஷபாலி வர்மா, பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது வீராங்கனையாகவும், இந்த சாதனையை நிகழ்த்திய 3-வது இந்திய வீராங்கனையாகவும் இணைந்துள்ளார்.
இளம் வயதிலேயே ஷபாலி வர்மா படைத்துள்ள இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA