Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவத்துறை சார்பில், பொதுமக்களை வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், தெருநாய்களுக்கான மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாமானது சென்னை மாநகராட்சியின் 2026-27ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரேபிஸ் இல்லா சென்னை என்ற இலக்கை நோக்கிய முக்கிய நடவடிக்கையாகும்.
நகரம் முழுவதும் உள்ள சுமார் 1.8 லட்சம் தெருநாய்களில் 80 சதவீத நாய்களுக்கு அடுத்த 50 முதல் 60 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக 30 சிறப்பு கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தலா 10 குழுக்கள் வீதம் ஒரே நேரத்தில் 3 மண்டலங்களில் களமிறங்கி வீதி வீதியாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு சுமார் 100 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் செயல்படுவதால், தினமும் சராசரியாக 3000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தீவிர முகாம் தொடங்கியதில் இருந்து இதுவரை 59,460 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவற்றுக்கு சிறப்பு மை மூலம் அடையாளம் இடப்படுகிறது.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், கடந்த ஆண்டு முதற்கட்டமாக 1.47 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்திருந்தது.
தற்போது இரண்டாம் கட்டமாக 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் இந்த முகாம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b