எதிர்க்கட்சியின் பொய் பிரசாரங்களுக்கு உண்மையால் பதிலடி கொடுக்க வேண்டும் - முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 07 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் போலவரம் உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி, ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்துக்கும் தண்ணீர் வழங்கி, தெலுங்கு தாய்க்கு ‘ஜலஹாரதி’ வழங்குவதே தனது இலக
A


அமராவதி , 07 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் போலவரம் உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி, ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்துக்கும் தண்ணீர் வழங்கி, தெலுங்கு தாய்க்கு ‘ஜலஹாரதி’ வழங்குவதே தனது இலக்கு என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 2 நாள் ‘லீடர்ஷிப் கான்க்ளேவ்’ நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளிடம் சந்திரபாபு நாயுடு பேசினார்.

அப்போது, நீர்ப்பாசனத் துறையில் தான் மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டி பிரபல ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் தன்னை ‘வாட்டர் மேன்’ என்று குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு, சந்திரபாபுவை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தார்.

பட்டிசீமா, ஹந்த்ரி-நீவா, வெலிகொண்டா, போலவரம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சந்திரபாபு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி செலவில் 36 திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் எழுந்து நின்று சந்திரபாபுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொண்டர்களுக்கு முக்கியத்துவம்

கட்சியின் கடினமான காலங்களில் துணை நின்ற தொண்டர்களுக்கு உரிய மரியாதையும், பொறுப்புகளும் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.

களத்தில் சிறப்பாக செயல்படும் தொண்டர்களுக்கு கட்சியிலும், சட்டமன்றத்திலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கட்சியை வலுப்படுத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையும் முக்கியம் என்று தெரிவித்த சந்திரபாபு, பேனர், புகைப்படம் போன்ற சிறிய விஷயங்களுக்காக கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

2024-ம் ஆண்டு தேர்தலைவிட 2029-ம் ஆண்டு தேர்தலில் அதிக வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“உண்மையால் பதிலடி”

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தின் நிர்வாக அமைப்புகள் சீர்குலைக்கப்பட்டதாக சந்திரபாபு குற்றம்சாட்டினார்.

ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு கடந்த ஆட்சி ஒரு உதாரணம் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ‘ஹிட்-ரன்-ஹைட்’ என்ற முறையில் அரசியல் செய்து வருகிறது. அவர்களின் பொய் பிரசாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உண்மை தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் வலுவாக பதிலளிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கினார்.

வெலிகொண்டா மற்றும் போலவரம் இடது கால்வாய் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்புவதாகவும், அவற்றை உண்மை தகவல்களுடன் மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சி, நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் ஆந்திராவில் வளர்ச்சி, நலத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதாக சந்திரபாபு தெரிவித்தார்.

தல்லிக்கு வந்தனம், அன்னதாதா சுகீபவா, அன்ன கேன்டீன்கள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மெகா டி.எஸ்.சி. மூலம் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், போகாபுரம் விமான நிலையம், ராயலசீமாவில் தொழில் வளர்ச்சி, அமராவதியில் குவாண்டம் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஆந்திர மாநிலத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

நிலப் பதிவுகளை பாதுகாப்பதற்காக ராஜமுத்திரை மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA