சட்டம்-ஒழுங்கு குறித்து பதிலளிக்காமல் சர்க்காரியா கமிஷனை பேசுவதா? –முன்னாள் சபாநாயகர் அப்பாவு!
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதலமைச்சர் விஜய் அளித்த பதிலை விமர்சித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக மாணவ, மாணவிகளை பாதித்து வரும் ப
அப்பாவு


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதலமைச்சர் விஜய் அளித்த பதிலை விமர்சித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக மாணவ, மாணவிகளை பாதித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை என அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

“போதைப்பொருள் கலாச்சாரம் 100 நாட்களில் உருவானதல்ல; பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ளது” என்று முதலமைச்சர் கூறியது பொறுப்பற்ற பதில் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை சட்டப்பேரவையில் பேசியது ஏன் என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய மக்கள் பிரச்சினைகளுக்கு பதிலளிக்காமல் திமுக மேடைப் பேச்சுகளைப் போன்று முதலமைச்சர் பதிலளித்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்காமல், “FIR பதிவு செய்திருக்கிறோம்” என முதலமைச்சர் கூறியது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான பதில் அளிக்காமல், உதவியாளர்கள் எழுதிக் கொடுத்த உரையை சினிமா பாணியிலான அங்க அசைவுகளுடன் வாசித்தது சட்டப்பேரவையின் மாண்பை கேள்விக்குள்ளாக்கிவிட்டதாகவும் அப்பாவு தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P