வீரமணி வழக்கில் குற்றத்தை மறைக்க முயன்ற காவல் துறைக்கு தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் விஜய்க்கு நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) வீரமணி வழக்கில் குற்றத்தை மறைக்க முயன்ற காவல் துறைக்கு தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் விஜய்க்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் தள
Narayanan Thirupathi


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

வீரமணி வழக்கில் குற்றத்தை மறைக்க முயன்ற காவல் துறைக்கு தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் விஜய்க்கு

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர்

தனது எக்ஸ் தளத்தில்,

போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி குறித்து எதுவுமே தெரியாதது போல் இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகள் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பல 'தசாப்தங்களாக' பெரும் தொழிலதிபர் என்கிற பார்வையுடன் வலம் வந்து கொண்டிருந்த வீரமணியிடம் கைநீட்டி பணம் வாங்காத அரசியல் கட்சிகளே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.

84 வயதில் 13 வயது குழந்தையை சீரழித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிற அளவிற்கு கீழ்த்தரமான செய்கையில் அந்த நபர் ஈடுபட்டு சிறைக்கு செல்ல நேரிடும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தான்.

ஆனால், கை நீட்டி காசு வாங்கிவிட்டோமே என்பதற்காக வீரமணியின் இழி செயல் மற்றும் கைது குறித்து விமர்சிக்காது இருப்பது நியாயமா என்பதை அவர்களின் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல் கட்சியோ அல்லது சமூக இயக்கமோ பொது மக்களிடமிருந்து வசூலித்து தான் தங்களின் இயக்கத்தை வழிநடத்த முடியும் என்பது இயல்பான ஒன்று தான்.

ஆனால், நன்கொடை அளித்தவர்கள் தவறு செய்யும் போது தட்டிக்கேட்பது தவறல்ல. நடந்திருப்பது பெரும் கொடூர செயல்.

பெண் பிள்ளைகளை பெற்ற யாருமே அதிர்ச்சியுறும் கொடுமையான நிகழ்வு. ஆனால், அதை கண்டிக்காமல் இருப்பது சமூக விரோதம் மட்டுமல்ல, தேச விரோத செயலும் கூட.

அதே போல், ஒரு சில ஊடகங்கள் இதை செய்தியாக வெளியிட்டிருந்தாலும், பல ஊடகங்கள் இதை கண்டும் காணாமல் கடந்து செல்வது பொறுப்பற்ற செயல் என்பதோடு மனிதாபிமானமற்ற செயலும் கூட. இது ஊடக அறமல்ல.

நிர்பயா, ஆசிபா உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு பெண் வன்கொடுமைகள் நடைபெற்ற போதெல்லாம் தினந்தோறும் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் பலமுறை விவாத மேடைகளில் அவை குறித்து விவாதித்த நிலையில், இது வரை வீரமணியின் அயோக்கியத்தனம் குறித்தோ, அதை மறைத்து அலட்சியப்படுத்திய காவல்துறை குறித்தோ எந்த விவாதங்களும் நடைபெறாதது உண்மையில் மனிதாபிமானத்தை, தர்மத்தை, நீதியை ஊடகங்கள் மறந்து விட்டனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

'போக்ஸோ' குற்றங்கள் கொலை குற்றங்களை விட கொடுமையானவை. பல்வேறு வழக்குகள் காவல்துறை அலட்சியத்தாலும், நீதித்துறையின் தாமதங்களாலும், குற்றவாளிகனின் பணபலம் மற்றும் அதிகார பலத்தினாலும் நீண்டு கொண்டே போவது நீதித்துறையில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட பல வருடங்களாகியும் வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது வெட்கக்கேடு. உதாரணத்திற்கு, செங்கல்பட்டு சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் பல பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, தன்னை கடவுளாக சித்தரித்துக் கொண்ட 'சிவசங்கர் பாபா'வுக்கு எதிரான வழக்கில் ஐந்து வருடங்களாகியும் முன்னேற்றம் இல்லாதது நீதித்துறைக்கும்,அரசாங்கத்திற்கும், நம் சமுதாயத்திற்கும் பெரும் அவமானம்.

வீரமணியின் வழக்கில் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தால், அலட்சியத்தால் ஏற்கனவே தாமதம் ஆகியுள்ள நிலையில், இந்த வழக்கை துரிதப்படுத்தி, குற்றம் செய்தவர்களுக்கு, உடந்தையாக இருந்தவர்களுக்கு, குறிப்பாக குற்றத்தை மறைக்க முயன்ற காவல் துறை கருப்பு ஆடுகளுக்கு உரிய நேரத்தில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டியதை முதலமைச்சர் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN