Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 செப்டம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கிய ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
கன்னியாகுமரி கடலோரத்தில் ராகுல் காந்தி ஏற்றிய ஒற்றுமைச் சுடர், இன்று கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நம்பிக்கையாக எரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலின் போக்கையே மாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் நடைபெற்றதாகவும், வெறுப்பு மற்றும் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக “வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறப்போம்” என்ற முழக்கத்துடன் இந்தியாவை ஒன்றிணைக்கும் முயற்சியாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மதம், மொழி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதும், எதேச்சதிகாரத்திடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதுமே யாத்திரையின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் உருவான அந்த எழுச்சியும், விதைக்கப்பட்ட அன்பின் அரசியலும் தொடர்ந்து தேசம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருப்பதாகவும், அந்த உன்னத விழுமியங்களைப் பாதுகாக்க அனைவரும் தொடர்ந்து உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P