Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)
சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 கோடி பெற்றுக்கொண்டு, அந்த தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தனவிமல், தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.4 கோடி பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் அந்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தனவிமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரர் தனவிமலை வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ