Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி மற்றும் எதிரணி தலைவர்கள் எழுப்பிய மக்கள் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது,
இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி மற்றும் எதிரணி தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் ஒரு இடத்தில்கூட பதிலளிக்கவில்லை என்றும், பழைய விவகாரங்களை மட்டுமே பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.
சர்க்காரியா கமிஷன் குறித்து பேசிய முதலமைச்சர், அந்த கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது என்பதுகூட அவருக்குத் தெரியாது என்றும், ஆதாரம் இல்லை எனக் கூறி அந்த விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பிய போதிலும், அதுகுறித்து ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், எப்போதோ நடந்து முடிந்த விவகாரங்களைப் பற்றி முதலமைச்சர் பேசியதாக டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்தார்.
முதலமைச்சரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு அவர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை மக்கள் எதிர்பார்த்த நிலையில், மக்கள் பிரச்சினைகள் குறித்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மிசா சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும், மிசா சட்டத்தின் கீழ் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் கைது செய்யப்பட்டனர் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
கட்சி நிதியைப் பெறுவதற்கு சட்டப்பூர்வமான நடைமுறைகள் உள்ளதாகவும், பெறப்படும் நிதி தொடர்பான விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதிக அளவில் கட்சி நிதி பெற்றிருப்பது பாஜகதான் என்றும், அனைத்து கட்சிகளும் நிதி பெற்றிருக்கலாம் என்றாலும், சிலர் அதனை மறைமுகமாகப் பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒரு பேச்சு தவறாகச் சென்றால் சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால், அவரது கட்சி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல லட்சம் ரூபாய் கையூட்டாகப் பெறப்பட்டதாக அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே பேசியுள்ளதாகவும் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
உள்துறை தொடர்பான கேள்விகளுக்காவது நாளை முதலமைச்சர் துணிச்சலுடன் பதில் அளிப்பாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ