சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடியால் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் – மாணிக்கம் தாகூர்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, ஓபிசி மக்களின் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவ
மாணிக்கம் தாகூர்


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, ஓபிசி மக்களின் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தற்போதைய கணக்கெடுப்பு முறையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாதிப் பெயர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவாகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் துல்லியமான தரவுகள் கிடைக்காமல் ஓபிசி மக்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பில் துல்லியமான தரவுகள் பெற தெலங்கானா மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியிருந்தார்.

“சாதிவாரிக் கணக்கெடுப்பில் முறைகேடு! OBC இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேடு!” என்ற முழக்கத்துடன் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னையில் ஆசிரியர் கி. வீரமணி இந்தப் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் Town Hall கூட்டங்கள் நடத்தப்பட்டு, சாதிவாரி கணக்கெடுப்பில் இருப்பதாகக் கூறப்படும் குளறுபடிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் காங்கிரஸ் தொடர்ந்து சமரசமின்றிப் போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam