Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 26 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பயன்பாடும் இன்றி செயலிழந்து கிடப்பதாகக் கூறி, மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது;
மோடி அரசின் போலி விளம்பர 'ஜன்தன் ஜும்லா'வை அம்பலப்படுத்தி, உலக வங்கி அறிக்கை மூலம் இந்தியாவில் 35% வங்கிக் கணக்குகள் எதற்கும் பயன்படாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதை கடந்த ஆண்டே நாம் சுட்டிக்காட்டி கடுமையாகக் கண்டித்திருந்தோம்.
அண்மையில் கூட நிதியமைச்சர் பயனாளிகள் எண்ணிக்கை பல கோடியாக உயர்ந்துவிட்டதாகவும், டெபாசிட் பல லட்சம் கோடியாகப் பெருகிவிட்டதாகவும், பல கோடி ரூபே கார்டுகள் வழங்கிவிட்டதாகவும் வெற்றுப் புள்ளிவிவரங்களை அடுக்கி ‘நிதி உள்ளடக்கம்’ என்று தம்பட்டம் அடித்தார். ஆனால் இன்று அதே மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை (DFS) தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலின் மூலம் இந்த போலி பிம்பத்தை உடைத்து, பாஜகவின் ஒட்டுமொத்த தோல்வியையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டில் உள்ள 59 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகளில் 26%-க்கும் மேல், அதாவது சுமார் 15.37 கோடி கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பயன்பாடும் இன்றி முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இந்த முடங்கிய கணக்குகளில் 37%-க்கும் அதிகமானவற்றில் (5.72 கோடி கணக்குகள்) ஒரு ரூபாய் கூட இல்லாமல் 'ஜீரோ பேலன்ஸ்' ஆக உள்ளது. மாநில வாரியாகப் பார்த்தால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 3.23 கோடி (21%) கணக்குகள் செயலிழந்துள்ளன; அதைத் தொடர்ந்து பீகாரில் 1.59 கோடி (10%), மத்தியப் பிரதேசத்தில் 1.35 கோடி (9%), மேற்கு வங்கத்தில் 1.02 கோடி (7%) மற்றும் மகாராஷ்டிராவில் 97.94 லட்சம் (6%) கணக்குகள் கைவிடப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய அளவில் பல கோடி வெற்று கணக்குகளைத் திறக்க வைத்துவிட்டு, இன்று கேஒய்சி நடைமுறைகள் பெயரிலும் பணமின்மையாலும் மக்களை நடுத்தெருவில் நிறுத்துவது ஏன்? ஏழை மக்களுக்கு எந்தப் பயனும் தராத இந்தக் கணக்குகள் தொடங்கப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் மிகப்பெரிய ஊழலும் முறைகேடும் ஒளிந்திருக்கிறதா? வெற்று எண்களைக் காட்டி கொள்ளையடிப்பதற்காகவே பாஜக அரசு இந்த நாடகத்தை நடத்தியதா?
இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்டு மக்களின் முன்னிலையில் பாஜகவின் போலி முகத்தை கிழித்தெறிந்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான், எங்களை பேசவிடாமல் வாயை அடைத்து உண்மைகளை மூடிமறைக்கப் பார்த்தது இந்த அரசு,ஆனால் எத்தனை நாடகங்கள் ஆடினாலும் விளம்பரப் வித்வான் மோடியின் ஆட்சியில் ஏழை மக்களுக்குக் கிடைத்தது வெற்று எண்களும், முடக்கப்பட்ட வெற்று வங்கிக் கணக்குகளுமே தவிர வேறொன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P