சட்டப்பேரவையில் பரபரப்பு - சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர
DMK MLAs stage a sit-in protest


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

அவையின் மையப் பகுதியான சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு திரண்டு வந்த தி.மு.க. உறுப்பினர்கள், திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மூத்த உறுப்பினர் செங்கோட்டையன், பேரவையின் புனிதத்தன்மைக்கு எதிராக மையப் பகுதிக்கு வந்துள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே இது குறித்து தெரிவித்த சபாநாயகர் கூறுகையில்,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரையில் பேசலாம் என்று கூறினேன். அதனைத் தொடர்ந்து நான் அதனை அனுமதித்தேன். நீங்கள் இந்த விஷயத்தை முன்னரே அமைதியாகக் கேட்டிருந்தால், விதிகளின்படி உங்களைப் பேச நான் அனுமதித்திருப்பேன்.

ஆனால் சபைக்குள் நடப்பது போலவும், நீங்கள் முன்னால் வந்து இங்கே அமர்வது போலவும் நீங்கள் எனக்கு அழுத்தம் கொடுக்க முயன்றால், நான் அதை அனுமதிக்க மாட்டேன்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவரை பேச நான் அனுமதிக்கப் போவதில்லை. இந்த பதில் அறிக்கைக்குப் பிறகு, வனத்துறை அமைச்சரை பேச ஏற்கனவே அனுமதித்துவிட்டேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

இந்த அவையின் கண்ணியத்தை மீறும் எந்தச் செயலையும் நாம் அனுமதிக்க முடியாது.முதலமைச்சர் தனது பதிலுரையை அளித்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை நான் பார்த்தேன். இப்போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மிரட்டி, பயமுறுத்தி அடிபணிய வைக்கும் இந்த பாணிக்கு நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சட்டமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b