Enter your Email Address to subscribe to our newsletters

எடப்பாடி, 07 செப்டம்பர் (ஹி.ச)
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், அங்கன்வாடி மையத்தில் 60 குழந்தைகளும், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் 34 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி வகுப்பறை கட்டிடத்தின் மேற்பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்ச்சி முடிந்து 7 நாட்களுக்கும் மேலாகியும் அந்த பேனர் இதுவரை அகற்றப்படாமல் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பலத்த காற்று வீசும் நேரங்களில் பேனர் மற்றும் அதன் கட்டமைப்பு கழன்று கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு விழுந்தால் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படக்கூடும் என்றும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, பேனரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் சிறு குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ