ஈரோட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து -இளைஞர் ஒருவர் படுகாயம்
ஈரோடு, 07 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் நசியனூர் ஜி.எச். சாலையில் வசித்து வரும் காமராஜர் மற்றும் பழனியம்மாள் குடும்பத்தினர் உணவகம் மற்றும் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் சூர்யாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தி
பட்டாசு


ஈரோடு, 07 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் நசியனூர் ஜி.எச். சாலையில் வசித்து வரும் காமராஜர் மற்றும் பழனியம்மாள் குடும்பத்தினர் உணவகம் மற்றும் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் மகன் சூர்யாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் சூர்யாவும் அவரது மனைவியும் இருந்த நிலையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதில் வீடு மற்றும் வீட்டின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த சூர்யா படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், சூர்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யாவுக்கு சுமார் 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆகியோர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பட்டாசுகள் எவ்வாறு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டன மற்றும் வெடிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிப்பு சம்பவம் நசியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam