காவலர்களின் பணிச்சுமையை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை - முதல்வர் விஜய் உறுதி
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று (செப்.7) பேரவையில் பதில்
Government taking serious measures to reduce police workload


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று (செப்.7) பேரவையில் பதில் அளித்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது. இந்தச் சூழலில் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அது தொடர்பாக பேரவையில் அவர்கள் குரல் எழுப்பிய நிலையில் அரசினர் சட்ட முன் வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் காவல்துறையினர் தொடர்ந்து ஓய்வின்றி பணியாற்றி வருவதாலும், அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இரவு பகல் பாராமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்களுக்கு போதிய ஓய்வு இல்லாதது அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், காவல்துறையினரின் நலனை பாதுகாப்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார். காவலர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக முறையான பணி நேரம் வரையறை செய்யப்பட்டு, அனைவருக்கும் சுழற்சி முறையில் கட்டாய ஓய்வு மற்றும் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிச்சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் காவலர்களுக்கு சிறப்பு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் காவல்துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆள் பற்றாக்குறையை போக்க, துறைவாரியாக உள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.

இதன் மூலம் தனி நபர் மீதான பணிச்சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை காக்கும் காவல்துறையினரை காப்பது அரசின் தலையாய கடமை என்ற உன்னத நோக்கத்துடன் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b