கோவிந்தராசு கொலை வழக்கு ,சிபிஐ விசாரணைக்கு பயந்தே கொலை வழக்காக மாற்றினர் – அஸ்வத்தாமன்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) 2021ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவிந்தராசு கொலை வழக்கை சுட்டிக்காட்டி, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் திமுக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்
அஸ்வத்தாமன்


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

2021ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவிந்தராசு கொலை வழக்கை சுட்டிக்காட்டி, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்று சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசிய விவகாரம், 2021ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தையே உலுக்கிய சம்பவம் என தெரிவித்துள்ளார்.

அன்றைய திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு உயிரிழந்த வழக்கை, சந்தேக மரணம் என்ற அளவில் மட்டுமே விசாரித்து, யாரையும் குற்றவாளியாக சேர்க்காமல் காவல்துறை மூடி மறைத்ததாக அஸ்வத்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கோவிந்தராசு தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அப்போதைய திமுக எம்பி ரமேஷை குற்றவாளியாக சேர்க்கவோ, கைது செய்யவோ காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, எம்பி ரமேஷை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தனது தலைமையில் கடலூரில் பாஜக போராட்டம் நடத்தியதாகவும் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணியும் ரமேஷை கைது செய்ய வலியுறுத்தியதுடன், பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த விவகாரத்தை மத்திய தொழிலாளர் ஆணையத்திடம் கொண்டு சென்றதாகவும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ உள்ளே வந்துவிடப்போகிறது என பயந்து, கொலை நடந்து 23 நாட்களுக்குப் பிறகே வழக்கை கொலை வழக்காக அன்றைய திமுக அரசு மாற்றியது.

திமுக எம்பி ரமேஷ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்” என அவர் தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், திமுகவினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கைது செய்யப்படுவதில்லை என்ற நிலை அப்போது இருந்ததாகவும் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P