பழி போடும் கீழ்த்தரமான அரசியலை ஒருபோதும் செய்ய மாட்டேன் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதி
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச) தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ
பழி போடும் கீழ்த்தரமான அரசியலை ஒருபோதும் செய்ய மாட்டேன் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதி


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவெக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், தான் வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போலவே, 2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை தரவுகளுடன் என்னாலும் கூற முடியும். ஆனால், அதுபோன்ற கீழான அரசியலை நாம் செய்வதும் இல்லை, அதற்கான அவசியமும் நமக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய கருத்துகளுக்கு மறைமுகமாக பதிலளித்த முதலமைச்சர், மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

மாணவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு அனைத்து வகையான முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வரும் என்றும், இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b