சென்னையில் களைகட்டிய ‘ரோட்டரி ஒலிம்பியாட்’ – 75 பள்ளிகள் பங்கேற்பு!
சென்னை , 07 செப்டம்பர் (ஹி.ச.) ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234 சார்பில், ''ரோட்டரி ஒலிம்பியாட்'' என்று பிரபலமாக அழைக்கப்படும் ''ரோட்டரி இன்ட்ராக்ட் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ராவாகன்சா'' (RISE 2026) விளையாட்டுப் போட்டிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட
A


சென்னை , 07 செப்டம்பர் (ஹி.ச.)

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234 சார்பில், 'ரோட்டரி ஒலிம்பியாட்' என்று பிரபலமாக அழைக்கப்படும் 'ரோட்டரி இன்ட்ராக்ட் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ராவாகன்சா' (RISE 2026) விளையாட்டுப் போட்டிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில்,பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்வு, அடிமட்ட அளவிலான விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு

தேவையானதாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு சபாநாயகர் பிரபாகர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர்

சுரேஷ் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிறைவு விழாவில், சுங்கத்துறை உதவி ஆணையர் ஜோன்ஸ் பெர்லிங் ராஜா, பங்கேற்று, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆளுநர் சுரேஷ் ஜெயின், இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை சிறுவயதிலேயே கண்டறிந்து ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்கள் உயரிய இலக்குகளை அடைய உதவுவதற்கே RISE 2026 வடிவமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

மாநில அரசின் விளையாட்டுத் திட்டங்களுக்குத் தனது உற்சாகமான ஆதரவைத் தெரிவித்த அவர், தொடர்ச்சியான போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அரசுடனான தொடர் கூட்டாண்மை மூலம் இத்தகைய முயற்சிகளுடன் இணைந்து செயல்பட ரோட்டரி மாவட்டம் 3234 என்றும் உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் நிகழ்வின் பிரம்மாண்டத்தைச் சுட்டிக்காட்டிய RISE 2026 தலைவர் Rtn. A. டேவிட், 75 பள்ளிகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவர்களும், பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் கொண்டுள்ள வளர்ந்து வரும் ஆர்வமே இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறிய அவர், உலகளவில் வெற்றி பெறும் இந்திய விளையாட்டு வீரர்களை இன்றைய இளைஞர்கள் தங்களின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு வரும் ஒரு துடிப்பான பண்பாட்டு மாற்றமும் இதற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்,

அரசின் நலத்திட்டங்களில் இணைந்து பணியாற்றும் ரோட்டரியின் அழைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமையிலும் வந்ததாகக் கூறினார்.

அம்பத்தூர் பகுதியில் ரோட்டரியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் நினைவு கூர்ந்த அவர், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுடனும் 3,000 குழந்தைகள் பங்கேற்கும் வகையிலும் இந்த விளையாட்டு விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த நிர்வாகிகளைப் பாராட்டினார்.

விளையாட்டு மட்டுமே சாதி, மத பேதமின்றி குழந்தைகளை ஒற்றுமையாக வளர்க்கும் எனக் குறிப்பிட்ட அவர்,

ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா மற்றும் ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, சண்டை சச்சரவின்றி திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த ‘மினி ஒலிம்பியாட்’ மூலம் மாநில, தேசிய மற்றும் உலக அளவில் புகழ்பெறும் திறமைசாலிகள் உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.

ரோட்டரி 3234-ன் மக்கள் பணிகளுக்குத் தனது உதவிக்கரம் எப்போதும் இருக்கும் என உறுதியளித்த அவர், நிறைவாக, எதையும் விட, இதயத்தின் அழகுணர்வும் மனநிறைவும் மிக முக்கியமானவை, எனக் குறிப்பிட்டு, மக்கள் தொண்டின் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியே மேலானது என்று கூறி, உறுப்பினர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA