Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 07 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டகுப்பம் அருகே ஆரோவில் அடுத்த மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனாகிய அருள்மிகு ஆவுடையீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி மூத்த விநாயகர் பூஜை, வேள்வி, நவக்கிரக வேள்வி மற்றும் பாலகணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு கால யாக பூஜைகள், நவகன்னியர் பூஜை, நவசக்தி பூஜை, மங்களப் பொருட்கள் வேள்வி, சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பன்னிரு திருமுறை பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தின் முக்கிய நாளான இன்று திருப்பள்ளி எழுச்சி, காப்பு அணிதல் மற்றும் நான்காம் கால வேள்வி நடைபெற்றது. பின்னர் வேத குருமார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்குடங்கள் புறப்பாடாக எடுத்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து கோயில் கருவறை விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவர்களுக்கும், பரிவார மூர்த்திகளான வேத விநாயகர், ஞான வெற்றிவேலன், முருகப்பெருமான், திருமால், நான்முகன், துர்க்கை, நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, பெருமாள் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் மாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஆவுடையீஸ்வரர் மற்றும் யோகாம்பிகை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam