மயிலாடுதுறையில் மழையில் நனைந்து சேதமடையும் நெல் மூட்டைகள் - உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை, 07 செப்டம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடி பணிகள் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. இந்நிலைய
நெல் முட்டைகள்


மயிலாடுதுறை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சுமார் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடி பணிகள் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 50 சதவீத அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்து விற்பனைக்காக காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த 30-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் கடந்த மாதம் 27-ஆம் தேதி மூடப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் மீண்டும் கொள்முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை நிலையங்கள் திறக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் அவை நனைந்து சேதமடைந்துள்ளன. கொள்முதல் நிலைய வளாகங்களில் நெல் மூட்டைகள் குவிந்து கிடப்பதையும், அவற்றைச் சுற்றி மழைநீர் தேங்கி இருப்பதையும் கழுகுப் பார்வைக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து, அதை மீண்டும் காயவைத்து விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரப்பதத்துடன் நீண்ட நேரம் இருக்கும் நெல் முளைத்து வீணாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழையில் நனைந்து சேதமடைந்த நெல்லுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam