மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் வரலாறு!
மதுரை, 07 செப்டம்பர் (ஹி.ச.) மதுரையின் அடையாளமாக விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், கோயில் அறங்காவலர் குழுவைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்றத்தின்
க


மதுரை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரையின் அடையாளமாக விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், கோயில் அறங்காவலர் குழுவைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்றத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, கடந்த கால அறங்காவலர் நிர்வாகம் முதல் தற்போதைய குழு வரையிலான பின்னணியைப் பார்ப்பது அவசியமாகிறது.

நீண்ட காலம் அறங்காவலர் தலைவராக இருந்த கருமுத்து கண்ணன்

மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தில் சமீபத்திய காலத்தின் முக்கியமான பெயர் கருமுத்து தி. கண்ணன். 2006-ஆம் ஆண்டு அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், திமுக, அதிமுக என ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் சுமார் 18 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்தார். 2023 மே 23-ஆம் தேதி அவர் மறைந்ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி க. செல்லத்துரை இடைக்காலமாக கோயில் தக்கார் பொறுப்பை வகித்தார்.

கருமுத்து கண்ணன் காலத்தில் கோயில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளிர்சாதன வசதிகள், தகவல் மையம், ஆன்மிகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோயில் சொத்துப் பாதுகாப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்றவையும் முக்கிய சவால்களாக இருந்தன. அவரது காலத்திலும் அறங்காவலர் பதவி, நியமனம் மற்றும் நிர்வாக அதிகாரம் தொடர்பான சட்டரீதியான விவாதங்கள் எழுந்துள்ளன.

இதனால் அறங்காவலர் குழுவுக்கும் அரசின் நிர்வாக அமைப்புக்கும் இடையிலான அதிகார எல்லை என்பது புதிய பிரச்சினையல்ல.

கருமுத்து கண்ணன் மறைவுக்குப் பிறகு 2023 நவம்பர் 6-ஆம் தேதி, தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 46(3)-ன் கீழ் ஐந்து பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

ருக்மணி பழனிவேல் ராஜன், து. சுப்புலட்சுமி,

பி.கே.எம். செல்லையா, மருத்துவர் மு. சீனிவாசன், எஸ். மீனா ஆகியோர் ஆவர். இவர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன் ஏற்கெனவே அறங்காவலராகப் பணியாற்றியவர்; பி.கே.எம். செல்லையாவும் முன்னதாக அறங்காவலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 டிசம்பர் 1-ஆம் தேதி ஐந்து பேரும் பதவியேற்ற நிலையில், பின்னர் ருக்மணி பழனிவேல் ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் மீனாட்சி கோயில் அறங்காவலர் குழுவை வழிநடத்திய முக்கியமான முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இவர்களின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு அதே ஐந்து பேரையும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நியமித்தது. 2026 ஜனவரியில் மீண்டும் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற தேர்தலில் ருக்மணி பழனிவேல் ராஜன் போட்டியின்றி இரண்டாவது முறையாக அறங்காவலர் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் தற்போது நடைபெறவுள்ள கும்பாபிஷேக காலத்தில், ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழுவே பதவியில் இருக்கும்.

இந்நிலையில் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட பெயர்கள் இடம்பெறாமல், “அறங்காவலர்கள் குழு” என பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அறங்காவலர் குழுவின் உறுப்பினர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார்.

அறங்காவலர்களின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை? யார் உத்தரவின் பேரில் பெயர்கள் தவிர்க்கப்பட்டன? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி, கோயில் இணை ஆணையரிடம் விரிவான விளக்கம் கோரியது.

இதில், கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர்களின் அதிகார எல்லை குறித்த அடிப்படையான கேள்வி எழுந்துள்ளது. அறங்காவலர்கள் சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலின் மிக முக்கியமான நிகழ்வான குடமுழுக்கு ஏற்பாடுகளில் அவர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே விவாதத்தின் மையமாகியுள்ளது.

ஏற்கெனவே அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு விட்டதால் அவற்றை மாற்றுவது நடைமுறையில் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, குடமுழுக்கை நினைவுகூர்ந்து கோயிலில் அமைக்கப்படும் கல்வெட்டில் தற்போதைய அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதன் மூலம், தற்போதைய விவகாரம் வெறும் அழைப்பிதழில் பெயர் இடம்பெறாதது என்ற அளவில் முடிவதில்லை. கோயில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவின் சட்டப்பூர்வ பங்கு என்ன, செயல் அலுவலரின் அதிகார வரம்பு என்ன, இந்து சமய அறநிலையத்துறையின் மேற்பார்வை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற பெரிய நிர்வாகக் கேள்விகளையும் இது முன்னிறுத்துகிறது.

தற்போதைய குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், முன்னாள் திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாய் என்பதால் அவரது நியமனம் தொடக்கம் முதலே அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவரது உறவுமுறை மற்றும் அவர் வகிக்கும் அறங்காவலர் பதவி ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டியது அவசியம். நியமனம் சட்டப்படி நடைபெற்றதா என்பதும், பதவியில் இருக்கும் அறங்காவலர்களின் சட்டப்பூர்வ பங்கு நிர்வாகத்தில் மதிக்கப்பட்டதா என்பதும் இரண்டு வெவ்வேறு கேள்விகள்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்தில், இதுவரை இந்த விவகாரத்தில் தான் விலகியே இருந்ததாகவும் ஆனால், தற்போது உண்மைக்காக கருத்து தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது விசாரணையின்போது நீதிமன்றம் வாய்மொழியாக விமர்சனங்களை தெரிவித்ததாகவும், எழுத்துப்பூர்வமான தீர்ப்பிலும் சில விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் இந்த விவகாரத்தின் உண்மையான குற்றவாளிகள் அல்ல,அதிகபட்சம் ஒரு சந்தர்ப்பவாதி மற்றும் தகுதியற்ற நபருக்கு தேவையற்ற வகையில் பணிந்து நடந்துகொண்டதே அவர்களது தவறு” மேலும், கோவில் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று பெண் அறங்காவலர்கள் தங்களுக்கு சட்டத்தின் கீழும், ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இருந்த உரிமைகளுக்காக உறுதியாகப் போராடியதாக பி.டி.ஆர். பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இரண்டு ஆண் அறங்காவலர்கள் நீதிமன்றத்திலேயே தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்ததாகவும், பின்னர் அந்த உரிமைகள் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதற்கு பெண் அறங்காவலர்களின் உறுதியான நிலைப்பாடே காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், கருமுத்து கண்ணன் தலைமையிலான நீண்டகால நிர்வாகத்திலிருந்து ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையிலான புதிய அறங்காவலர் குழு வரை மீனாட்சி கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது.

தற்போது நடைபெற உள்ள குடமுழுக்கு, அந்த நிர்வாக வரலாற்றில் மற்றொரு முக்கிய அத்தியாயமாக மாறியுள்ளது. அறங்காவலர்கள் வெறும் பெயரளவிலான பதவியா அல்லது கோயில் நிர்வாகத்தில் உண்மையான சட்டப்பூர்வ அதிகாரம் கொண்டவர்களா? என்ற கேள்விக்கான பதிலையும் இந்த விவகாரம் எதிர்காலத்தில் தீர்மானிக்கக்கூடும்,

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J